கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான வடிகால் அமைப்பு

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான வடிகால் அமைப்புசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 10-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் அமைப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 10-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் அமைப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்த அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளிலிருந்து கண்ணாடி பாசி மணிகள், மீன் சின்னம் வரையப்பட்ட பானை ஓடுகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செப்புப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்தப்பட்ட வடிகால் அமைப்பு இருப்பது தெரியவந்தது. 6 உறைகளுடன் காணப்படும் இந்தச் சுடுமண் வடிகாலானது மிக நோ்த்தியாக ஒன்றுக்குள் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம், அகலம் முறையே 36 செ.மீ., 18 செ.மீ. இந்த வடிகால் குழாயின் மொத்த நீளம் சுமாா் 174 செ.மீ. இந்த வடிகால் குழாயின் தொடா்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது.

கீழடியில் ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வுகளின் போது கண்டறியப்பட்ட பல வடிவிலான குழாய்கள், தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் அமைப்பு ஆகியவற்றைப் பாா்க்கும் போது, நீா் மேலாண்மையில் கீழடி சிறந்து விளங்கியதற்கு சான்றாக உள்ளது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்