கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.358 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டிடம்: முதல்வர் விரைவில் திறக்க உள்ளார்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.358.87 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் (பொ) பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
நகர்ப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரஅமைப்பு இயக்கம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமைஇணைந்து பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வடசென்னை பகுதி ஏழை,எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் 6 தளங்களை கொண்ட கட்டிடமாகவும், 441 படுக்கைகளுடனும் அமைகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபிரிட் ஆபரேஷன் தியேட்டர் வகையிலான ஒரு கூட்டு அறுவை அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. 13 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்ஐ போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் இங்குவரவுள்ளன. பணிகள் முடிவடைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்.
கேரள மாநிலம் வயநாட்டுக்கு உதகமண்டலம் மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களில் 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.