குஜராத்: விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியம் – ஆசிரியர்களுக்கு ரூ. 64 லட்சம் அபராதம்!

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலின்போது, ஒன்றிரண்டு மதிப்பெண்கள் தவறுதலாக விடுபட்டிருந்தால்கூட சம்பந்தப்பட்ட மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதைக் கருத்திற்கொண்டு மிகுந்த சிரத்தையுடன் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

அப்படியிருக்கையில், கணிதப் பாட விடைத்தாள் திருத்தலின்போது, ஆசிரியரின் கவனக்குறைவால் 30 மதிப்பெண்கள் தவறுதலாக விடுபட்டதால் சம்பந்தப்பட்ட மாணவர் பொதுத்தேர்வில் தோல்வியடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கணித ஆசிரியரால் 30 மதிப்பெண்களை தவறுதலாக விடுபட்டுள்ளதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதைத்தொடர்ந்து அலட்சியப்போக்குடன் செயல்பட்ட ஆசிரியருக்கு தண்டனையாக குஜராத் மாநில கல்வி வாரியத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆசிரியர் மட்டுமல்லாது, இதே பாணியில், விடைத்தாள் திருத்தும் பணிகளில் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட 4,488 ஆசிரியர்களுக்கும் ரூ. 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நிகழாண்டு பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் பணிகளில் சுமார் 45,000 ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், விடைத்தாள்கள் திருத்தலின்போது தவறுதலாக விடப்படும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அதற்கான தண்டனையாக ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது.

பொதுத்தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம். கண்ணும் கருத்துமாக தேர்வெழுதி, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாளை எதிர்நோக்கி மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருப்பர்.

இந்த நிலையில், தான் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தியை பாதிக்கப்பட்ட மாணவரால் நம்ப முடியவில்லை. இதையடுத்து அந்த மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 30 மதிப்பெண்கள் கூட்டப்படாமல் விடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தலின்போது 10 அல்லது அதற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் தவறுதலாக விடுபட்டிருந்த விடைத்தாள்களை திருத்தியவர்களில் அதிகமானோர் கணித ஆசிரியர்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது. அதிலும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்கள் கணக்குப் பாட விடைத்தாள் திருத்தும் பணிகளில் அலட்சியமாகச் செயல்பட்டிருப்பது, அதிர்ச்சியும் கவலையுமளிக்கும் கூடுதல் தகவலாகச் சேர்ந்துள்ளது.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களைப் பொருத்தே தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைக்கும் என்ற சூழலில் ஆசிரியர்களின் அலட்சியப் போகு கண்டனத்திற்குரியதே.

10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,654 ஆசிரியர்களுக்கு ரூ. 20 லட்சம் அபராதமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், பொதுப் பாடப் பிரிவு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,404 ஆசிரியர்களுக்கு ரூ. 24.31 லட்சம் அபராதமும், அறிவியல் பாடப் பிரிவு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 1,430 ஆசிரியர்களுக்கு ரூ. 19.66 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் இனிமேல் கவனமுடன் செயல்படுவார்கள் என்பதை உறுதிசெய்யவே அபராதம் விதிக்கப்படுவதாக குஜராத் மாநில கல்வி வாரிய துணைத் தலைவர் தினேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது