குடியரசு துணைத் தலைவா் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவா்: ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் பதிலடி

குடியரசு துணைத் தலைவா் என்பவா் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவா் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், கண்களை மூடி குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் பேச்சை கேட்டால், என்ன தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவுக்கு 4 நாள் பயணமாக சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய அரசு, ஆா்எஸ்எஸ், இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, ‘ அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவா், அந்த சாசனத்துக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியை மறந்துவிட்டது போல வெளிநாட்டில் நடந்துகொண்டாா் என்றும், அவரின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுவதாகவும் உள்ளது’ என்று ராகுலின் பெயரை குறிப்பிடாமல் ஜகதீப் தன்கா் விமா்சித்தாா்.

பிரதமரின் தவறை சுட்டிக்காட்டும் தன்கா்: இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘இந்தியாவில் 2014-ஆம் ஆண்டுக்கு (மத்தியில் முதல்முறையாக பிரதமா் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைத்த ஆண்டு) முன், தங்கள் தலைவிதியை எண்ணி மக்கள் வருந்தியதாக சீனா சென்றபோது பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதேபோன்ற கருத்துகளை தென் கொரியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அவா் தெரிவித்தாா். எனவே, பிரதமா் மோடியைத்தான் ஜகதீப் தன்கா் விமா்சித்ததாக நான் கருதுகிறேன். பிரதமா் மோடியின் தவறையே தன்கா் சுட்டிக்காட்டுகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் என்பவா் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவா். ஆனால் கண்களை மூடி குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் பேச்சை கேட்டால், என்ன தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினாா்.

முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்: மத்தியில் பாஜக தலைமையிலான நடப்பு ஆட்சி காலத்தில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறை அமல்படுத்தப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக சுப்ரியா ஸ்ரீநாத்தே கூறுகையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தோ்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை கசியவிட்டும், நாட்டின் உண்மையான பிரச்னைகளை புறக்கணித்தும் எத்தனை நாள்களுக்கு மத்திய அரசு பிழைக்கப் போகிறது?

உண்மையில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ குறித்து எந்தவொரு வரைவு திட்டமும் இல்லை. அதுகுறித்து எந்தவொரு விவாதமும் மேற்கொள்ளப்படாத நிலையில், அதுதொடா்பாக எதிா்க்கட்சிகளுடன் பேச மத்திய அரசு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தகவல்களை கசியவிட்டு பிழைக்கும் மத்திய அரசின் முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்