குரங்கம்மை சிகிச்சை குறித்து 200 மருத்துவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குரங்கம்மை சிகிச்சை குறித்து 200 மருத்துவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், குரங்கம்மை தொற்று சிறப்பு வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மருத்துவமனை டீன் தேரணிராஜன், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் குரங்கம்மை பற்றிய நெருக்கடி நிலை அறிவிப்பை அறிவித்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, காங்கோ, நைஜீரியா, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ், கொலம்பியா போன்ற 127 நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் உள்ளன. அந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் குரங்கம்மை கண்டறியப்பட வில்லை. ஆனாலும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிகிச்சைஅளிக்க தலா 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னைகிண்டி கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையம் உட்பட இந்தியா முழுவதும் 35 ஆய்வகங்களில் குரங்கம்மை கண்டறிதல் பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 200 மருத்துவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புகளை எப்படி கையாள்வது, எப்படி சிகிச்சை செய்வது போன்றவைகள் குறித்து விளக்க கருத்தரங்கம் நடைபெறுகிறது.

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்: தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது. பருவமழைக் காலம் வருவதால், டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் வரும் செப்.2-ம்தேதி உள்ளாட்சி அமைப்புகள்,சுகாதாரத் துறை ஒருங்கிணைத்த மாவட்ட அலுவலர்களுடனான கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்