கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார்: ஆம் ஆத்மி

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இதனிடையே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. பல்வேறு நிபந்தனைகள் விதித்து சுப்ரீம்கோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மராட்டிய தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷி தேர்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என்று ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறுகையில்,

"டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் நேர்மையான சான்றிதழை வழங்குவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் டெல்லி மக்களுக்கு முழு நேர்மையுடன் சேவை செய்துள்ளார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் முதல்-மந்திரிக்கு கிடைக்கும் பாதுகாப்பு, அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒரு வாரத்தில் விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பாதுகாப்பு குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. அவர் ஒருமுறை அல்ல, பலமுறை தாக்கப்பட்டார், அவருடைய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்பதை அவரிடம் சொல்லி விளக்க முயற்சித்தோம். ஆனால் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று முடிவு செய்துள்ளார். அதன்பின்னர் கெஜ்ரிவால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

Related posts

இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தனியார் உணவத்தில் அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் எப்படி? – துறையூரில் பரபரப்பு