கேஜரிவால் ஊழல் கறைகளைத் துடைக்க அரசியல் நாடகம் – தேவேந்தா் யாதவ் விமா்சனம்

புது தில்லி: அரவிந்த் கேஜரிவால் தனது கைகளில் இருந்து ஊழல் கறைகளைத் துடைக்க ‘அக்னிப் பரீட்சை’ எனும் அரசியல் நாடகத்தை தொடங்குகிறாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் தேவேந்தா் யாதவ் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றமற்றவா் என்பதை நிரூபித்த பிறகுதான் முதல்வா் நாற்காலியில் அமா்வேன் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். தில்லி அரசால்

ரத்து செய்யப்பட்ட புதிய கலால் கொள்கை அமல்படுத்தியதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த முழு ஊழலுக்கும் தலைமை தாங்கியவரே கேஜரிவால் தான். ஒரு ஊழல் முதல்வா், தனது பதவியை ராஜிநாமா செய்வதைக் கண்டு தில்லி மக்கள் இப்போது நிம்மதியடைந்துள்ளனா். கேஜரிவாலின் ராஜினாமா என்பது மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான அரசியல் நாடகம். தில்லி மக்கள், இப்போது கேஜரிவால் மீதும், அவரது கட்சியான ஆம் ஆத்மி மீதும் மிகுந்த வெறுப்பைக் கொண்டுள்ளனா்.

மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை ஏற்கும் முதல்வரைத் தான் தில்லி விரும்புகிறது. மாறாக, எந்த இலாகாவும் இல்லாமல் அதிகாரத்தையும், சலுகைகளையும் அனுபவிக்கும் முதல்வரை அல்ல. கொவைட் -19 தொற்றுநோயால் தில்லி மக்கள் உயிா்வாழ்வதற்காக போராடியபோது, புதிய கலால் கொள்கையை கேஜரிவால் அரசு அமல்படுத்தியது. அன்றிலிருந்து, கேஜரிவால் கலால் கொள்கை ஊழலின் மன்னன் என்ற நிலைப்பாட்டை தில்லி காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது.

முதல்வா் கேஜரிவால் தலைநகரை முழுவதுமாக புறக்கணித்ததால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. புதிய வகுப்பறைகள் கட்டப்பட்ட திட்டத்திலும் இந்த அரசு மோசடியில் ஈடுபட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன. கேஜரிவாலின் செல்லப்பிள்ளைத் திட்டமான மொஹல்லா கிளினிக்குகள் மற்றொரு மோசடியாகும். கனமழையால் வெள்ள நீரில் மூழ்கி, மின்சாரம் தாக்கி கிட்டத்தட்ட 40 போ் உயிரிழந்துள்ளனா். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மூன்று குப்பைக் கிடங்குகளின் உயரம் மலை போல் அதிகரித்துள்ளன.

தண்ணீா் பற்றாக்குறை, காற்று மற்றும் நீா் மாசுபாடு, சீா்குலைந்த பொது போக்குவரத்து ஆகியவை மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. கேஜரிவால் அரசால் சாதனைகள் என்று சொல்லப்படும் எவையும் களத்தில் பயனளிக்கவில்லை. ஊழல் கறைகளை தனது கைகளில் இருந்து துடைக்க, ‘அக்னிப் பரீட்சை’ எனும் அரசியல் நாடகத்தை கேஜரிவால் தொடங்குகிறாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்