கேண்டி கிரஷ் மோகம்: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்!கேண்டி கிரஷ் மோகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் கேண்டி கிரஷ் மொபைல் கேமுக்கு அடிமையானதால் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உ.பி.யி்ல் அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருபவர் பிரியம் கோயல். இவர் பணி நேரத்தில் தொலைபேசியில் கேண்டி கிரஷ் விளையாடுவது, சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுவது, தொலைபேசியில் உரையாடுவது என்பது வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த தகவல் கசிந்த நிலையில் மாவட்ட நீதிபதி ராஜேந்திர பன்சியா அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது அவர் எடுத்த வகுப்பில் மாணவர்களின் நோட்டு புத்தகங்களைச் சரிபார்த்துள்ளார். அதில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை பல தவறுகள் இருந்துள்ளது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் அனைத்துக்கு டிக் அடித்துள்ளார் ஆசிரியர்.
பின்னர், ஆசிரியரின் தொலைபேசியை ஆய்வு செய்தனர். ஆசிரியர் வைத்திருக்கும் தொலைபேசியில் ஒரு அம்சம் உள்ளது. அதில் கடைசியாக அவர் பயன்படுத்தியதைக் கண்காணிக்கும் அம்சமாகும்.
அதன்மூலம் மொபைல் போனை ஆய்வு செய்ததில் பள்ளி செயல்படும் நேரத்தில் அவர் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கேண்டி கிரஷ் விளையாடியதும், 26 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதும், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது.
மாணவர்களின் வகுப்புப் பாடம், வீட்டுப் பாடங்களைச் சரிபார்த்து அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மொபைல் போன்களைப் பயன்படுத்துவது ஒரு பிரச்னையல்ல, ஆனால் பள்ளி நேரங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவது சரியல்ல என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர் பிரியம் கோயல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து, பொறுப்பான பணியில் இருக்கும் ஆசிரியர்களே இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால், மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.