“கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது” – தினகரன்

“கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது” – தினகரன்

சென்னை: முல்லைப் பெரியாற்றில் கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது. மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென்மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் துரோகம் ஆகும்.

எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி