கேஷ் ஆன் டெலிவரி.. ரூ.1.5 லட்சத்தில் ஐஃபோன்: கூரியர் நிறுவன ஊழியர் கொலை!

கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ரூ.1.5 லட்சம் விலையுள்ள ஐஃபோனை ஆன்லைன் வணிக நிறுவனத்தின் மூலம் ஆர்டர் போட்ட நபர், பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது பணத்தைக் கொடுக்கும் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஐஃபோனை கூரியர் நிறுவன ஊழியர் கொண்டு வந்து கொடுத்ததும், அவரைக் கொலை செய்து இந்திரா கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூரியர் நிறுவன ஊழியரின் உடலை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகிறார்கள்.

இதையும் படிக்க.. மருத்துவமனையில் அனுமதி.. ரஜினி எப்படி இருக்கிறார்?

லக்னௌவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐஃபோனை டெலிவரி செய்யச் சென்ற கொரியர் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஜானம் என்ற நபர், ஃபிளிப்கார்ட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐஃபோனை, வீட்டில் பொருளை பெற்றுக்கொள்ளும் போது பணம் தரும் வசதி மூலம் ஆர்டர் செய்திருக்கிறார்.

செப். 23ஆம் தேதி கொரியர் ஊழியர், பரத் சாஹு, ஐஃபோனுடன் கஜானம் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரிடமிருந்து ஐஃபோனை வாங்கிக் கொண்ட கஜானமும், அவரது நண்பரும் சேர்ந்து, பரத்தைக் கொன்று அவரது உடலை கால்வாயில் வீசியிருக்கிறார்கள்.

பரத், இரண்டு நாள்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர், 25ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். உடனடியாக, அவரது தொலைபேசி எண்ணை தொடர்புகொண்ட போது, அது கடைசியாக கஜானம் வீட்டில் இருந்துதான் பேசப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடத்தை காவல்துறையினர் அடைந்த போது, கஜானம் நண்பர் ஆகாஷ் தான் இருந்துள்ளார். அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முக்கிய கொலையாளியும், கொலை செய்யப்பட்டவரின் உடலும் தேடப்பட்டு வருகிறது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!