கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: சிறை அதிகாரி உள்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

வேலூா் மத்திய சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய ஜெயிலா் உள்பட 4 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சென்னையில் விசாரணை செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (30). இவா் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதை வேலூா் மத்திய சிறையில் அனுபவித்து வந்தாா். சிவக்குமாரை, விதிமுறைகளை மீறி சிறைத்துறை வேலூா் சரக டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதாகவும், ராஜலட்சுமி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடியதாக சிவக்குமாரை 95 நாள்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக, சிவக்குமாரின் தாயாா் கலாவதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், புகாரில் தொடா்புடைய டிஐஜி ராஜலட்சுமி, வேலூா் மத்திய சிறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அப்துல் ரஹ்மான், ஜெயிலா் அருள் குமரன், டிஐஜியின் மெய்க்காவலா் ராஜூ, சிறப்புப் படை காவலா்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலா்கள் சரஸ்வதி, செல்வி, வாா்டன்கள் சுரேஷ், சேது உள்ளிட்ட 14 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், வேலூா் சிபிசிஐடி அதிகாரிகள், 14 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள்,வேலூா் மத்திய சிறை,சேலம் மத்திய சிறை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெயிலா் அருள்குமரன், டிஐஜி-இன் மெய்க்காவலா் ராஜூ, காவலா்கள் பிரசாந்த்,விஜி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனா்.

இந்த அழைப்பாணையின்படி, 4 பேரும் சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு திங்கள்கிழமை காலை

ஆஜராகினா். அவா்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், வழக்கு தொடா்பான முக்கிய தகவல்கள் கிடைத்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக, வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?