“கைத்தறி துறை என்பது திமுகவின் லட்சிய கொள்கை துறை” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
சென்னை: “கைத்தறி துறை என்பது திமுகவின் தனிப்பட்ட துறை. மேலும், இது லட்சிய கொள்கை துறை,” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கைத்தறித் துறையின் சார்பில், 10-வது தேசிய கைத்தறி நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, தலைமை வகித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “அமைச்சர் காந்தி நீண்ட நெடுங்காலம் என்னுடன் அரசியலில் ஒன்றாக இருப்பவர். நான் உயர ஏணியாக இருந்தவர். எனது வாழ்க்கை தொடர்பாக வரலாறு எழுதப்பட்டால் அதில் ஓர் அத்தியாயத்தில், அவருக்கு முக்கிய இடமுண்டு. என்னுடனும் வீராசாமியுடனும் நட்புடன் இருந்தவர்.
நாளடைவில் தலைவரால் ஈர்க்கப்பட்டவர். எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர் காந்தி. இந்த துறையில் நல்ல பெயர் வாங்கியவர்களே கிடையாது. அதை மாற்றியவர் காந்தி. இக்கூட்டத்தில் அமர்ந்து இருப்பது சட்டப்பேரவையில் அமர்ந்து இருப்பதுபோல நான் உணர்கிறேன். கைத்தறி துறை என்பது திமுகவின் தனிப்பட்ட துறை. எங்களிடம் மாநில சுயாட்சி உள்பட பல்வேறு கொள்கைகள் தனியாக உண்டு. அதில், எங்களின் லட்சிய கொள்கை துறைதான் கைத்தறி துறை. எந்த ஒரு ஆட்சியிலும் உயர்வு பெறாத துறை. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இப்போதுவரை, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்,” என்று அவர் பேசினார்.
விழாவில், 2023-24-ம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட ரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில், 20 கைத்தறி ரகங்களில், ரகத்துக்கு தலா 3 விருதாளர்கள் வீதம் 60 பேருக்கு திறன்மிகு நெசவாளர்கள் விருது வழங்கப்பட்டன. நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,200 வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.