கொடி, தேசிய கீதத்தை மாற்ற வங்கதேசம் பரிசீலனை!

வங்கதேசத்தின் கொடி மற்றும் தேசிய கீதத்தை அந்நாட்டின் இடைக்கால அரசு மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்தவகையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மதம் சார்ந்துள்ள விஷயங்களில் அதிக மாற்றங்களை மேற்கொள்வதாகத் தெரிகிறது.

வங்கதேசக் கொடியும் தேசிய கீதமும்

வங்கதேசத்தின் கொடியானது நரேன் தாஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தேசிய கீதமானது ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. இவர்கள் இருவருமே ஹிந்துகள்.

வங்கதேசத்தின் கொடியில் இஸ்லாமியத்தை குறிக்கும் வகையிலான சின்னங்கள் ஏதும் இல்லை. தற்போது கொடியில் உள்ள சிவப்பு வட்ட வடிவம் பிறையையும் குறிக்கவில்லை. தற்போது உள்ள தேசிய கீதமானது 1971 ஆம் ஆண்டின் சுதந்திர போராட்டத்தை சுட்டிக்காட்டவில்லை என்பன போன்ற வாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனால், வங்கதேசத்தைச் சேர்ந்த பலரும் கொடி மற்றும் தேசிய கீதத்தை மாற்றும் யோசனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கதேச மக்கள்தொகையில் 93% முஸ்லிம்கள் உள்ளனர். 5% ஹிந்துக்களாகவும், எஞ்சியவர்கள் கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

நெருக்கடியில் அவாமி லீக் கட்சி

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்ட கடும் வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு இடைக்கால அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

வங்கதேசத்தின் ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான், ராணுவ ஆட்சியை அறிவித்ததைத் தொடர்ந்தது ஹசீனாவின் அதிகாரபூர்வ இல்லம் சூறையாடப்பட்டது.

அருங்காட்சியகம் அடித்து நொறுக்கப்பட்டது.

வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் ஹசீனாவின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலை உடைக்கப்பட்டது.

இவை அனைத்துக்கும் எதிர்வினையாற்ற முடியாத நெருக்கடி நிலை அவாமி லீக் கட்சிக்கு ஏற்பட்டது.

தற்போது கொடி மற்றும் தேசிய கீதத்தை மாற்றுவது குறித்து பரிசீலிப்பதிலும் எந்தவித எதிர்க்கருத்தும் இருக்காது என்ற நிலையே அவாமி லீக் கட்சிக்கு நீடிக்கிறது.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி