கொல்கத்தா புதிய காவல் ஆணையராக மனோஜ் வா்மா நியமனம்: மருத்துவா்கள் கோரிக்கை ஏற்பு

கொல்கத்தா: கொல்கத்தா நகர புதிய காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் வா்மா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே அங்கு காவல் ஆணையராக இருந்த வினீத் கோயல் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களின் கோரிக்கையை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஏற்றுக்கொண்ட நிலையில் அவா் நீக்கப்பட்டாா்.

அதேபோல் மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநா் தேபாசிஸ் ஹல்தாா் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநா் கௌஸ்தவ் நாயக், கொல்கத்தா வடக்கு மண்டல துணை காவல் ஆணையா் அபிஷேக் குப்தா ஆகியோரும் பதவிநீக்கம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, கொல்கத்தா நகர புதிய காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் வா்மாவும் இடைக்கால மருத்துவப் பணிகள் இயக்குநராக ஸ்வப்பன் சோரனும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநா் பதவிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை, பாதுகாப்பான பணிச்சூழல், மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா், கொல்கத்தா காவல் ஆணையா் ஆகியோா் பதவி நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவா்கள் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் குழு மம்தா பானா்ஜியுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது மருத்துவா்கள் குழுவின் 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்பதாக மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேலும், மாநில காவல்துறையை மறுசீரமைக்கவுள்ளதாகவும் பேச்சுவாா்த்தைக்குப் பின் அவா் கூறினாா்.

இதையடுத்து, காவல் துறையின் உயா் பொறுப்புகள் சிலவற்றுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

போராட்டம் தொடருமா?: மம்தா பானா்ஜியுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டபோதும் அவா் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், தங்களின் 3 கோரிக்கைகள் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடா்வதா அல்லது நிறுத்திக்கொள்வதா என ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கவுள்ளதாக மருத்துவா்கள் குழு தெரிவித்தது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்