கொல்கத்தா பெண் டாக்டர் கொலை: 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உட்பட பலரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கொல்கத்தாவில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், பயிற்சி டாக்டர்களின் போராட்டம் நீடித்து வந்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மருத்துவர்கள், தன்னார்வ அமைப்புகள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 42 கி.மீ தூரத்தை இலக்காக கொண்ட இந்த பேரணியானது, நேற்று மாலை 4 மணிக்கு ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கி நள்ளிரவில் ஷியம்பஜார் அருகே நிறைவடைந்தது.

இந்த நிலையில், "கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜூனியர் டாக்டர்கள், பேராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் இன்று காலை முதல் பகுதியாக பணிக்குத் திரும்பினர். ஆனால் புறநோயாளிகள் பிரிவு பணிக்கு யாரும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர் அனிகேத் மஹதோ கூறுகையில், "மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலையை கருத்தில் கொண்டு எங்கள் சகாக்கள் இன்று காலை முதல் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் மட்டுமே தங்கள் துறைகளுக்கு திரும்பியுள்ளனர். இது ஒரு பகுதியளவு கடமை என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே மாநிலத்தின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு டாக்டர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலும் 'மருத்துவ முகாம்கள்' நடத்தி பொது சுகாதாரத்தில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும்" இவ்வாறு அவர் கூறினார்.

உயிரிழந்த டாக்டருக்கு நீதி கோரியும், மாநில சுகாதாரத்துறை செயலரை பதவி நீக்கம் உள்ளிட்ட தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற இன்னும் 7 நாட்கள் காத்திருப்போம். அவ்வாறு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை என்றும் ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11