கொல்கத்தா: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு -புதிய காவல்துறை ஆணையர் நியமனம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனா்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மாநில முதல்வா் மம்தா பானா்ஜியை திங்கள்கிழமை சந்தித்தனா். மம்தா இல்லத்தில் சுமாா் 2 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை(செப்.17) மாலை, மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொல்கத்தா காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க காவல்துறையில் திறமையான அதிகாரியாகக் கருதப்படும் மனோஜ் குமார் வர்மா கொல்கத்தா காவல்துறை ஆணையராக இன்று(செப். 17) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், வினீத் குமார் கோயல் ஏடிஜிபி-ஆகவும், காவல்துறை சிறப்பு செயற்குழுவின் ஐஜிபி-ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கொல்கத்தா(வடக்கு) காவல்துறை உதவி ஆணையர் அபிஷேக் குப்தாவும் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்