கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரும், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது, இந்த வழக்கு சம்பந்தமாக, வெளிநாட்டில் இருந்து வந்த செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை கண்டறிய இன்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளதால் கூடுதல் விசாரணை மேற்கொள்ள அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!