நீலகிரி,
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நீலகிரியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"திருப்பதிக்கு சாமி கும்பிட செல்பவர்கள் எல்லோரும் விரதம் இருந்து, தூய்மையோடு கடவுளை வணங்குவதற்காக செல்கிறார்கள். இந்நிலையில், இந்த லட்டு விவகாரம் மக்களின் உணர்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கோவில் விஷயங்களில் அரசாங்கங்கள் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டிலும் கோவில்களின் மீது நம்பிக்கை இல்லாத தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் கோவில்களின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வழிபாட்டு தளங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
ஆனால் இந்து கோவில்களின் வருமானம் இந்து கோவில்களுக்கே செலவு செய்யப்படுவதில்லை. எனவேதான் இந்து கோவில்கள் நம்பிக்கை உடையவர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். திருப்பதியில் இதற்கு முன்பு கோவில்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்திருக்கிறார்கள். தற்போது முழுமையான நம்பிக்கை உடையவர்கள் அங்கு நடந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.