கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஹிந்துத்துவ அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை!

பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷை, பெங்களூரு ராஜராஜேஷ்வரிநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் வெளியே வைத்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்.5-ஆம் தேதி இரவு இந்த கொடூர கொலை நிகழ்ந்தது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையை முடுக்கிவிட்டது. வழக்கு விசாரணையில், கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையதாக மொத்தம் 18 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு, இருசக்கர வாகனத்தில் சென்று கௌரி லங்கேஷை சுட்டுகொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ்

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகிய இருவருக்கும் கடந்த 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 11-ஆம் தேதி அவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், விஜயபூராவில் அமைந்துள்ள காளிகாதேவி கோயிலுக்குச் சென்று அவர்கள் இருவரும் வழிபாடு நடத்தினர். அப்போது அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த உமேஷ் வண்டால், குற்றவாளிகள் இருவருக்கும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். அப்போது அங்கே திரண்டிருந்த ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தோர் ‘பாரத் மாதா கி ஜே’ என்றும், சநாதன தர்மத்தை ஆதரித்தும் முழக்கங்களை எழுப்பியதையும் காண முடிந்தது.

இதனிடையே, ஹிந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம் சேனையின் தலைவர் நீல்கந்தா கண்டாகல் குற்றவாளிகள் இருவரையும் குறிப்பிட்டு, “இந்த கொலைக்கும், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள இருவருக்கும் எவ்வித தொடர்புமில்லை” என பகிரங்கமாகப் பேசியுள்ளார். எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஊடகங்களை தவிர்த்ததையும் காண முடிந்தது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்… உயிரின் விலை என்ன?

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பேருக்கு கடந்த வாரம் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 பேருக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி(செப்.4) கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள மொத்தம் 18 பேரில், தற்போது 16 குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஐ.நா. செயலர் அவமதிப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு – காங். தலைவர்கள் கண்டனம்!

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது