சசி தரூர் மீதான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

‘பிரதமா் மோடி சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா்’ என்று ஆா்.எஸ்.எஸ். தலைவா் ஒருவா் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், சா்ச்சையான கருத்துளைக் கடந்த 2018-ஆம் ஆண்டு கூறினாா்.

இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவா் ராஜீவ் பப்பாா், சசி தரூர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தாா். கோடிக்கணக்கான சிவ பக்தா்களின் மனதை சசி தரூா் புண்படுத்திவிட்டதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதை எதிா்த்து சசி தரூா் தாக்கல் செய்த மனுவில், அவா் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விசாரணை நீதிமன்றத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த விசாரணைகள் முடிந்த நிலையில், சசி தரூா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இரு தரப்பும் இன்று (செப்.10) ஆஜராகவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சசி தரூா் மேல்முறையீடு செய்துள்ளாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிய நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஏற்றுக்கொண்டது.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சசி தரூர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராஜீவ் பப்பார் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!