சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன.

முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வில்லியம்சன் விலகல்!

சச்சின் சாதனையை முறியடிப்பார்

பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அலஸ்டர் குக் (கோப்புப் படம்)

33 வயதாகும் ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12,716 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 3,205 ரன்களே தேவைப்படுகின்றன.

இதையும் படிக்க: அதிக எடை, ஒழுக்கமின்மை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!

இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் பேசியதாவது: ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அவருக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அவர் படைத்துள்ள சாதனைகளை முறியடிப்பது கடினம். டெஸ்ட் போட்டிகளில் 16,000 ரன்களைக் குவித்த முதல் வீரராக ரூட் மாறுவார் என நம்புகிறேன். அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜோ ரூட் வலம் வருகிறார் என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஜோ ரூட் 5-வது இடத்தில் உள்ளார். முதல் நான்கு இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (13,378 ரன்கள்), ஜாக் காலிஸ் (13,289) மற்றும் ராகுல் டிராவிட் (13,288) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!