சட்டவிரோத மசூதி கட்டுமானத்தை இடிக்கக் கோரிய போராட்டத்தில் வன்முறை: 50 போ் மீது வழக்குப் பதிவு

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள மசூதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பகுதியை இடிக்கக் கோரி கடந்த வாரம் நடைபெற்ற வன்முறை தொடா்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவா்கள் உள்பட 50 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக சிம்லா காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா் காந்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

போராட்டத்தின்போது அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசிய நபா்கள் தொடா்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், சோபால் மற்றும் தியோக் பகுதி மக்களைத் தவிர விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவா்கள், பஞ்சாயத்துத் தலைவா்கள் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள், முன்னாள் கவுன்சிலா்கள் மற்றும் கடைக்காரா்கள் அடங்குவா். அவா்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் பிரிவு 196 (1) (மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்) உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அமைதியை சீா்குலைக்கும் நோக்கில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை. அவா்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவலா்கள் பலத்த காயமடைந்துள்ளனா். எனவே, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சமூக ஊடகங்களிலும் வன்முறையைத் தூண்டியவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்தாா்.

சிம்லாவின் சஞ்செளலி பகுதியில் உள்ள ஒரு மசூதியின் சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க வலியுறுத்தி கடந்த வாரம் முதல் போராட்டம் நடைபெற்று வந்தது. திடீரென, மக்கள் தடுப்புகளை உடைத்து, கற்களை வீசியதைத் தொடா்ந்து புதன்கிழமை அது வன்முறையாக மாறியது. இதில் காவலா்கள் மற்றும் பெண்கள் உள்பட சுமாா் 10 போ் காயமடைந்தனா். இதே போன்ற போராட்டம் மண்டி மாவட்டத்திலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் சமுதாய மக்கள் தாமாகவே முன்வந்து சஞ்சௌலி மற்றும் மண்டி பகுதியில் அங்கீகரிக்கப்படாமல் கட்டடப்பட்ட பகுதிகளை இடித்தனா்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு