சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்

கோர்பா,

சத்தீஷ்காரில் வாலிபரை பாம்பு ஒன்று தீண்டியதில் அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அந்த நபரின் தகனத்தின்போது, அந்த பாம்பையும் உயிருடன் சேர்த்து கிராமவாசிகள் எரித்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் பைகாமர் கிராமத்தில் வசித்து வந்தவர் திகேஷ்வர் ரதியா (வயது 22). கடந்த சனிக்கிழமை இரவு, வீட்டில் படுக்கையை சரி செய்து கொண்டு இருந்தபோது, விஷ பாம்பு ஒன்று அவரை தீண்டி விட்டது.

இதுபற்றி அவருடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் கோர்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரதியா உயிரிழந்து விட்டார். பிரேத பரிசோதனைக்கு பின்பு, இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் அவருடைய உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்னர், கிராமவாசிகள் அந்த பாம்பை பிடித்து கூடை ஒன்றில் வைத்து விட்டனர். இதன்பின், அந்த பாம்பை கயிறு ஒன்றால் கட்டி, அதனை கம்பு ஒன்றில் தொங்க விட்டனர்.

ரதியாவின் இறுதி சடங்கில் அந்த பாம்பை இழுத்து சென்று தீயில் போட்டு எரித்து விட்டனர். இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது, வேறு யாரையாவது அந்த பாம்பு தீண்டி விட கூடும் என நாங்கள் அஞ்சினோம். அதனால், இறுதி சடங்கில் அதனை எரித்து விட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி கோர்பா சப்-டிவிசனல் அதிகாரி ஆஷிஷ் கேல்வார் கூறும்போது, பாம்பை கொன்றதற்காக கிராமவாசிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த ஊர்வன வகை உயிரினங்கள் சுற்று சூழலுக்கு அவசியம் என்ற வகையில் பாம்புகள் மற்றும பாம்புகடி மேலாண்மை பற்றி மக்களிடையே விழிப்புணர்வையும், கல்வியறிவையும் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்று கூறியுள்ளார்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!