சத்தீஸ்கா்: மின்னல் தாக்கி 5 பள்ளி மாணவா்கள் உள்பட 8 போ் உயிரிழப்பு

ராஜ்நந்த்கௌன்: சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கௌன் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பள்ளி மாணவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராஜ்நந்த்கௌன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நாள் முழுவதும் பலத்த கனமழை பெய்தது. இதற்கிடையே, மாவட்டத்தின் சோம்னி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜோராதரை கிராமத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. முதிபாா் கிராமத்தின் அரசுப் பள்ளியில் படித்து வரும் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 4 போ் காலாண்டு தோ்வு முடித்து, மிதிவண்டியில் வீடு திரும்பும் வழியில் மழையிலிருந்து தப்பிக்க ஒரு கூடாரத்தின்கீழ் தஞ்சமடைந்திருந்தனா். மாணவா்களை அழைத்து செல்ல மற்றொரு மாணவரும் சைக்கிளில் அங்கு வந்துள்ளாா். அப்போது அந்த இடத்தில் மின்னல் தாக்கியது. இதில் 5 மாணவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவா்களை மீட்டனா். உயிரிழந்தவா்கள் உடல்கள் கூறாய்வுக்காக ராஜ்நந்த்கௌன் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட ஒருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ரூ.4 லட்சம் நிவாரணம்: சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் விஷ்ணு தியோ சிங், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் காயமடைந்தவரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து தரவும் அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை