சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26 மற்றும் மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14 அன்றும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க |திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம்கள் அறங்காவலர்களாக முடியுமா? ஓவைசி கேள்வி!
இது தொடர்பான அறிவிப்பை இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த தேவஸ்தான அமைச்சர் வி என் வாசவன், “சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஒருவேளை பக்தர்கள் இறந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.
சபரிமலை யாத்திரைக்காக 13,600 போலீஸார் அதிகாரிகள், 2,500 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூட்புப் படையினர், 1,000 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பக்தர்கள் செல்லும் வழிகளில் அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கேரளத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 தமிழர்கள் பலி
பம்பா, அப்பாச்சிமேடு, சன்னிதானம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்பு இருதய சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பாம்பு கடித்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு விஷக்கடி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாத்திரைக்காக பேரிடர் மேலாண்மை ஆணையம் விரிவான செயல்திட்டத்தை தயாரித்துள்ளது. இதற்கென பத்தனம்திட்டா பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை வழங்கவும் தேவஸ்தானத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 20 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.