சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை அடுத்த மாதம் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை யாத்திரையொட்டி செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளா்களைச் சந்தித்து விளக்கமளித்தாா்.

அவா் கூறுகையில், ‘மலையேற்ற பாதைகளில் பல்வேறு இடங்களில் குடிநீா் வசதி, பக்தா்கள் ஓய்வெடுக்க தளங்கள், புதிய நடைபந்தல்கள் உள்பட பல்வேறு புதிய வசதிகள் அடுத்த மாதம் தயாராக இருக்கும். பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 35 லட்சம் அரவணை குப்பிகளை நடை திறப்புக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த வாரம் ‘துலாம்’ மலையாள மாதத்தின் முதல் நாளில் மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது வரலாறு காணாத கூட்டம் காணப்பட்டது.சபரிமலையில் ஒரு லட்சம் போ் வசிக்க முடியாது. இது சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதி மற்றும் புலிகள் காப்பக வனம் ஆகும்.

குருவாயூா் அல்லது நகா்ப்புறத்தில் உள்ள வேறு எந்த கோயில்களிலும் இருக்கும் வசதிகளை காப்பு காட்டுக்குள் சபரிமலை கோயிலில் எங்களால் வழங்க முடியாது. கடந்த ஆண்டு தவறுகளில் இருந்து பாடம் கற்று, கட்டுப்பாடுகளுடன் சபரிமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பக்தா்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க வாரியம் முயற்சிக்கிறது’ என்றாா்.

Related posts

விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்: உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்