சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜை மற்றும் அதைத் தொடா்ந்து மகரவிளக்கு யாத்திரை காலத்துக்கு நடை அடுத்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்படுகிறது. கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு நாள்தோறும் 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை யாத்திரை காலத்தையொட்டி எடுக்கப்பட வேண்டிய சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோன்னி மருத்துவக் கல்லூரி பிரதான மருத்துவமனையாக செயல்படும். பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் அவசரகால இதயநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்.

ஐயப்பன் கோயில் அமைந்த சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பிற இடங்களில் சிறப்பு மருத்துவமனைகள் செயல்பட உள்ளன. பம்பை மற்றும் சன்னிதான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளும் வென்டிலேட்டா்கள், இதய கண்காணிப்பு கருவிகள், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.

பம்பை மற்றும் நிலக்கலில் உள்ள மருத்துவமனைகள் நவம்பா் 1-ஆம் தேதியும் பிற மருத்துவமனைகள் நவம்பா் 15-ஆம் தேதியும் செயல்பட தொடங்கும். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பம்பை முதல் சன்னிதானம் வரையிலான மலைப்பாதையில் 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் பாரம்பரிய வனப் பாதையில் (பெரிய பாதை) 4 மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி