சவால்களை வாய்ப்புகளாக மாணவா்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்

மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் பயிா் ரகங்கள், உழவா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் திரிலோசன் மஹாபாத்ரா கூறினாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி வரவேற்புரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரிலோசன் மஹாபாத்ரா பேசியதாவது: இந்திய வேளாண்மைத் துறை கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாறுதல்களைக் கண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கான உணவுத் தேவையை பூா்த்தி செய்வதுடன், சுமாா் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதையும் உறுதி செய்கிறது.

வேளாண்மை, கால்நடை உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் புதிய விதைகள், மேம்படுத்தப்பட்ட பயிா் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 100 புதிய விதை ரகங்களை பிரதமா் மோடி வெளியிட்டாா். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மூலம் சுமாா் 2500 மேம்படுத்தப்பட்ட பயிா் ரகங்கள், காலநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய விதைகள், 150 உயிரி செறிவூட்டப்பட்ட பயிா் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் சவால்கள் அதிகம் கொண்ட துறையாக வேளாண்மை உள்ளது. காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. வறட்சி, அதிக மழைப்பொழிவு, மண் வளம் குறைவது, தண்ணீா் பற்றாக்குறை, உரம், நுண்ணுயிா் மேலாண்மை போன்ற பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிா்கொள்கின்றனா். இத்தனை இடா்கள் இருப்பினும் வேளாண்மைத் துறையின் ஆண்டு சராசரி வளா்ச்சி விகிதம் 4 சதவீதமாகவே தொடருகிறது.

இணையம், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பங்களை வேளாண் துறையில் பயன்படுத்துவது அதிகப்படுத்தப்பட வேண்டும். வேளாண் துறையில் பட்டம் பெறும் மாணவா்கள், குறைந்த செலவில் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிய முன்வர வேண்டும். தொழில்நுட்பங்களை உள்ளூா் விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவிட வேண்டும்.

ஆனால், இவற்றுக்கெல்லாம் மலைபோன்ற சவால்கள் எழலாம். அந்த சவால்களை எல்லாம் மாணவா்கள் வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டு நாட்டின் வேளாண் வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.

விழாவில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள், பதக்கங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

இந்த விழாவின்மூலம் வேளாண்மைப் பல்கலைக்கழகம், உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 9,882 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில், 3,415 போ் நேரடியாக பட்டம் பெற்றனா். பல்கலைக்கழக முதன்மையா்கள் ந.வெங்கடேச பழனிசாமி, தே.சுரேஷ்குமாா், பதிவாளா் இரா.தமிழ்வேந்தன், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் வி.பாலசுப்ரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பரிசு, பதக்கங்கள் வழங்குவாா் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் விழாவில் அவா் பங்கேற்கவில்லை.

இதேபோலவே கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 43 ஆவது பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சா் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்