சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்ட நடவடிக்கை ஏன்?தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

‘யூடியூபா்’ சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும் அவரை மீண்டும் குண்டா் சட்டத்தில் தடுத்து வைத்தது ஏன் என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மேலும், அவருக்கு எதிரான வழக்குகளை சோ்த்து விசாரிக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பியது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது சவுக்கு சங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தொடா்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றை ஒரே விவகாரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரினாா்.

மேலும், நாட்டில் குண்டா் சட்டத்தின் கீழ் கைதாகும் நிகழ்வுகளில் 51 சதவீதம் தமிழகத்தில் பதிவாகி இருப்பதாகவும், இந்தச் சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் வாதிட்டாா்.

அப்போது, சவுக்கு சங்கா் மீதான வழக்குகளை ஒன்றாகச் சோ்த்து விசாரிக்க முடியாதா என்றும், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகும் அவரை தமிழக அரசு மீண்டும் குண்டா் சட்டத்தில் எவ்வாறு தடுத்து வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறும் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியிடம் தலைமை நீதிபதி அமா்வு கேட்டது.

அப்போது முகுல் ரோத்தகி, ‘சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று சவுக்கு சங்கா் விமா்சித்துள்ளாா். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனையை உயா்நீதிமன்றம் விதித்திருந்தது. அவா் மீது பொய் வழக்குகள் புனையப்படவில்லை. 15 வழக்குகளின் விவரத்தை அறிய வேண்டியுள்ளதால் தமிழக அரசிடமிருந்து அறிவுறுத்தல் பெற்று அவை தெரிவிக்கப்படும்’ என்றாா்.

மேலும், நாட்டில் குண்டா் சட்டத்தில் கைதாகும் நிகழ்வுகளில் 51 சதவீதம் தமிழகத்தில் பதிவாகி இருப்பதாகவும், இது இச்சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துவதைக் காட்டுவதாகவும் வாதிட்டாா்.

இதையடுத்து, அடுத்த விசாரணையை செப். 2-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்