சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் தாமதமாக தொடங்கிய மீட்புப் பணிகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் தாமதமாக தொடங்கிய மீட்புப் பணிகள்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (செப்.28) காலை திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்புப் பணிகள் தாமதமாகத் தொடங்கியது.

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள முத்தாள்நாயக்கன்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல சனிக்கிழமை காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்கான முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் இங்கு உள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சாத்தூர் சிவகாசி வெம்பக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்ற விவரம் தெரியவில்லை. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பட்டாசு ஆலைக்குள் சென்று மீட்பு பணியை தொடங்க முடியாமல் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் காத்திருந்த நிலையில், மீட்பு பணி நடந்து வருகிறது.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு