சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ.: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாலை விபத்தில் உயிரிழந்த கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ.யின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, கோட்டூர் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் (எஸ்.ஐ.) குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) க/ப.சக்திவேல் என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கிருஷ்ணவேணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

North Korea releases footage showcasing its test launch of its latest solid-fuel intercontinental ballistic missile, designated the Hwasong-19.

வெள்ளோடு பறவைகள் சரணாலயப் பகுதியில் பறவைகளுக்காக பட்டாசைத் தவிர்க்கும் கிராம மக்கள்

Study Shows Covid-19 Led To A Decline In Outdoor Activities