சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்! ரெய்னா சூசகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறுவது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் அளித்துள்ளார்.

ஐபிஎல் 2025 தொடருக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டனர்.

இதையும் படிக்க : ஐபிஎல் 2025-ல் தோனி: அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்! முழுப் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 8 ஆண்டுகளாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்திய அணி மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரும், தோனிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவுக்கு ரிஷப் பந்த் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் தில்லியில் தோனியை சந்தித்தேன். அங்கே ரிஷப் பந்த்தும் இருந்தார். ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் ஒருவர் மஞ்சள் ஆடையை அணியவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பந்த், சென்னை அணியின் தோனிக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும், அவர் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால், அணியின் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ள பந்த், 3,284 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதமும், 17 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 128 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில், தில்லி அணி 2021 பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது.

கார் விபத்துக்கு பிறகு ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு விளையாடிய பந்த், 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார். 155 சராசரியுடன் 3 அரைசதங்களை விளாசினார்.

Related posts

தமிழ்நாடு நாள்– தவெக தலைவர் விஜய் வாழ்த்து

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்! நியூசிலாந்து 235-க்கு ஆல் அவுட்!

இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!