பெங்களூரு: பிரிட்டன் மன்னர் சார்லஸ், ராணி கன்சார்ட் கமிலாவுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற வருகை தந்திருப்பதகாவும், இந்த வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி பிரட்டனின் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுக்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது இது முதல் முறை.
இதையும் படிக்க.. 60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!
கடந்த 27ஆம் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கும் சார்லஸ், பெங்களூருவில் உள்ள சௌக்கியா சர்வதேச ஹோலிஸ்டிக் மருத்துவ மையத்தில் தங்கி உடல்நலனை மேம்படுத்தும் சிகிச்சை பெற புதன்கிழமை இரவு லண்டன் திரும்ப திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
காமன்வெல்த் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ், அங்கிருந்து நேரடியாக பெங்களூரு வந்திருப்பதகாவும், இது தனிப்பட்ட பயணம் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது மனைவி, ராணி கன்சார்ட் கமிலாவுடன் பெங்களூரு வந்திருப்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், விமான நிலையத்திலிருந்து நேரடியாக அவர் மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மருத்துவ மையத்தில், அரச தம்பதிக்கு காலையில் யோக பயிற்சி, காலை உணவு பிறகு உடல்நல மேம்பாட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், பிறகு மதிய உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஓய்வுக்குப் பிறகு, இரண்டாம் சுற்றில் சில சிகிச்சைகள் பெறுவதாகவும், தியானம், உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு மருத்துவ மைய வளாகத்துக்குள் ஒரு சிறு நடைப்பயிற்சி செய்வதாகவும், அங்குள்ள பசுமைப் பண்ணை மற்றும் கால்நடைப் பண்ணைகளை அரச தம்பதி பார்த்து மகிழ்வதாகவும் கூறப்படுகிறது.
அரச தம்பதியின் வருகையை முன்னிட்டு, மருத்துவ மையத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.