சித்தராமையா பதவி விலகலா? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!

சித்தராமையா பதவி விலகலா? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு..

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் முகாமிட்டுள்ளதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்து மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆளுநரின் உத்தரவுக்கு தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை முறையிடப்பட்டுள்ளது. சித்தராமையாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் பெங்களூரு வந்துள்ளனர்.

இதனிடையே, ஆக. 22ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் சித்தராமையா மீது வழக்குப் பதியப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

மேலும், சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராக தொடர்வாரா அல்லது பதவி விலகுவாரா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், பெங்களூருவில் கார்கே மற்றும் வேணுகோபாலை சந்தித்து கட்சியின் மாநில நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, எம்எல்ஏக்களின் கூட்டத்தை தொடர்ந்து தில்லி சென்று ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு