பிரபாஸ் ஆக்சன், காமெடி, காதல் என கலந்துக்கட்டி நடித்துள்ளார்.
சென்னை,
மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு, மீதி இருக்கும் உயிர்களை காம்ப்ளக்ஸ் என்ற உலகத்தில் வாழும் கமல்ஹாசன் தனது அதிகாரத்தால் அடிமைகளாக வைத்துள்ளார். அந்த உலகத்திற்குள் செல்ல முயல்கிறார் பிரபாஸ். மற்றொருபுறம் இழந்த உரிமையை மீட்க ரெபல் என்ற குழுவினர் கமலை எதிர்த்து போராடுகிறார்கள்.
இதற்கிடையே தனக்கு தேவையான ஊக்கமருந்து தீபிகா படுகோனின் வயிற்றில் வளரும் கருவில் இருப்பதை அறியும் கமல் அதை எடுக்க முயற்சிக்க அவரிடமிருந்து தப்பிக்கிறார் தீபிகா படுகோன். கமல் உலகத்துக்குள் பிரபாசால் செல்ல முடிந்ததா? ஆபத்தில் இருக்கும் தீபிகா படுகோனேவுக்கும், ரெபல் குழுவுக்கும் பிரபாஸ் உதவினாரா? என்பது மீதி கதை.
பிரபாஸ் ஆக்சன், காமெடி, காதல் என கலந்துக்கட்டி நடித்துள்ளார். வில்லன்களிடம் சண்டையிடுவதற்கு முன் குட்டி தூக்கம் போடுவது, காதலியிடம் அசடாக வழிவது என கதாபாத்திரத்தை ரசித்துப் பண்ணியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார்.
அமிதாப்பச்சன், முகத்தை மூடிய சாமியார் கோலத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து தேர்ந்த நடிப்பை கொடுத்து அசத்துகிறார். கமல்ஹாசன் சிறிது நேரம் வந்தாலும் அவரது அறிமுகமும், நடிப்பும் அருமை என்றே கூறலாம். அவருடைய உருவம், வசிப்பிடம் என எல்லாமே ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
தீபிகா படுகோன் தனது சிசுவுக்கு ஆபத்து என்று அறிந்ததும் அவர் எடுக்கும் முயற்சிகள் சிலிர்க்க வைக்கிறது. திஷா பதானி கவர்ச்சிக்கு பயன்படுகிறார். ஷோபனா, பசுபதி ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
பிரம்மானந்தம் படுத்துக்கொண்டே சிரிக்க வைக்கிறார். ஒளிப்பதிவாளர் டிஜோர்ஜ் ஸ்டொஜிகோவிச் படத்தை பிரமாண்டமாக காண்பிக்க பெரிதும் உதவியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் பின்னணி இசை ஆக்சன் கதைக்குரிய ஆர்ப்பாட்டத்தோடு முழங்கியுள்ளது.
படத்தின் பெரும் பகுதி கிராபிக்ஸ் காட்சிகள்தான். லேசர் துப்பாக்கி, பறக்கும் கப்பல், புஜ்ஜி கார், கற்பனைக்கு எட்டாத உலகம் என பல அம்சங்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இரண்டாம் பாதியில் சொல்லப்போகும் கதைக்காக முதல் பாதியை மெதுவாக நகர்த்தி பொறுமையை சோதிக்கிறார்கள்.
நவீன காலத்தில் மகாபாரதம் கதையை தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை குதிரையை ஓடவிட்டு அதற்கு விஷுவல் பிரமாண்டம் கொடுத்து பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.