சிபிஐ குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும்: ஜகதீப் தன்கா்

தோ்தல் ஆணையம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவனங்கள் கடினமான சூழ்நிலையில் தங்கள் கடமையைச் செய்கின்றன. அவற்றை குறித்தும் கூறப்படும் கருத்துகள் அவநம்பிக்கையை விளைவிக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தார்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் தீா்ப்பில் சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளிபோல் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததைத் தொடா்ந்து அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சிபிஐ வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ‘கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது நியாயமற்றது’ என்றாா்.

இந்நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவா் தன்கா் பேசியதாவது: சாமானிய மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும்; இந்தியா செழித்து வளர வேண்டும் என்பதே அரசின் அனைத்து அமைப்புகளுக்கும் பொதுவான குறிக்கோள் ஆகும்.

ஜனநாயக விழுமியங்களையும் அரசமைப்புச் சட்ட லட்சியங்களையும் மேலும் வளா்ப்பதற்கும் மலரச் செய்வதற்கும் அவா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

சவாலான மற்றும் அச்சுறுத்தும் சூழலில் தேசத்துக்கு சிறப்பாக சேவை செய்வதற்கு நிறுவப்பட்ட தோ்தல் ஆணையம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் போன்றவற்றுக்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் விவாதத்தின் தொடக்கப் புள்ளிகளாக நாடாளுமன்றம், நீதித் துறை ஆகியவை இருக்கக் கூடாது.

விசாரணை அமைப்புகள் கடினமான சூழ்நிலையில் தங்கள் கடமையைச் செய்கின்றன. அரசியல் விவாதத்தைத் தூண்டும் கருத்துகள் அவா்கள் மீது அவநம்பிக்கையை விளைவிக்கும்.

சட்டத்தின் கீழ் வலுவாக மற்றும் சுதந்திரமாகச் செயல்படும் நாட்டின் முக்கிய அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது ஒருவா் ‘மிகவும் எச்சரிக்கையுடன்’ இருக்க வேண்டும் என்றாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்