சிலை கிடையாது.. அடைத்த கதவுக்கே பூஜை… அதிசயங்கள் நிறைந்த மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படாத நடைமுறைகளும், பழக்கமும் இக்கோவிலில் நடைமுறையில் உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ளது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்குவது இந்த தலம். இந்த காமாட்சி அம்மனை தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குல தெய்வமாக வழிபடலாம்.

இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்து நெய் ஊற்றி மனமுருகி வேண்டி சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திருமணம் தடைபடும் பெண்கள் இவ்வாலயத்தில் பூ முடித்து பார்த்து உத்தரவு பெற்று திருமணம் நிச்சயிக்கின்றனர். குறிப்பாக குழந்தைப் பேறு இல்லாதோர் அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் தங்களது புடவை முந்தானையை கிழித்து கோவில் வளாகத்திலுள்ள வில்வ மரக்கிளையில் தொட்டில் கட்டி செல்வார்கள். குழந்தை பிறந்தபின் குழந்தையை கரும்பு தொட்டிலில் படுக்க வைத்து தம்பதி இருவரும் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதே போல திருவிழாவின்போது ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தியாவிலேயே பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படாத நடைமுறைகளும், பழக்கமும் இக்கோவிலில் நடைமுறையில் உள்ளது. இங்கு மூலவருக்கோ, உற்சவருக்கோ சிலை கிடையாது. அடைத்த கதவுக்கே மூன்று கால பூஜை நடைபெறும். கருவறை கோபுரமோ, ராஜகோபுரமோ இல்லை. குச்சுப்புல் கோபுரமே அமைக்கப்பட்டு உள்ளது. கண்ணைக் கட்டி கொண்டு வருடந்தோறும் குச்சுப்புல் கூரை வேயப்படுவது அதிசயம்.

24 மணி நேர அணையா நெய் விளக்கு இரண்டு உள்ளன. மாசி திருவிழாவின்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நெய் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் நிறையும். காணிக்கை நெய்யில் ஈயோ, எறும்போ மொய்க்காது. நெய்யை உணவு சமைப்பதற்கு பயன்படுத்துவது இல்லை, சாப்பிடக் கூடாது, விளக்குகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பூஜையின்போது தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவது இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும் படைக்கப்படுகிறது.

பூஜை மண்டபத்தின் மேல் கெவுளி குறி சின்னம் உள்ளது. காஞ்சிபுரம் போன்று இங்கும் கெவுளி குறி கேட்பது வழக்கம். ஆடி முதல் 3 நாள் மஞ்சளாற்றில் இருந்து பூஜை பொருள் அடங்கிய பல்லய கூடை தேவராட்டத்துடன் வருவது வித்தியாச நடைமுறை.

குச்சுப்புல் கோபுர தரிசனம் செய்வது சிறப்பு. இதற்கு தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அன்ன நைவேத்யம் கிடையாது. துள்ளுமாவே சிறந்த நைவேத்யமாக படைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்