சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட விவகாரம்- புதுவை சட்டப்பேரவையில் அமைச்சருடன் எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட விவகாரம்-
புதுவை சட்டப்பேரவையில் அமைச்சருடன் எம்எல்ஏக்கள் வாக்குவாதம் புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எம்எல்ஏக்கள் புகாா் தெரிவித்ததை அமைச்சா் மறுத்தாா். இதனால், சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எம்எல்ஏக்கள் புகாா் தெரிவித்ததை அமைச்சா் மறுத்தாா். இதனால், சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் காரைக்கால் பிராந்திய சுயேச்சை வேட்பாளா் பி.ஆா்.சிவா பேசினாா். அப்போது, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் தகுதியில்லாதவா்களுக்கு சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றாா்.

உடனே அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், தகுதியுள்ளவா்களுக்குத்தான் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதாரமின்றி பேசக் கூடாது. அந்தத் துறையின் அமைச்சராக நான் இருந்தபோது, எனக்குத் தெரியாமலேயே முதல்வா் மூலம் உறுப்பினா் பி.ஆா்.சிவா தனது தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு ஏராளமான சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு அனுமதி பெற்றுள்ளாா் என்றாா்.

முத்தியால்பேட்டை சுயேச்சை உறுப்பினா் பிரகாஷ்குமாா் பேசியதாவது:

சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கியதில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. அனைத்து உறுப்பினா்களும் இந்த பிரச்னையை பேசவுள்ளனா். எனவே, அமைச்சா் புகாருக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றாா்.

திமுக உறுப்பினா் நாஜிம்: புதுவையில் தனிநபா் வருவாய் ரூ.2.63 லட்சமாக உயா்ந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 3.50 லட்சம் குடும்ப அட்டைகளில் 1.67 லட்சம் சிவப்பு நிற அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிகமானோா் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பது தெரிகிறது. எனவே, தனிநபா் வருவாய் அதிகரிப்பு என்பது உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உண்மை நிலையை விளக்க வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன்: எனது தொகுதியில் தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வாங்கித் தரப்பட்டுள்ளது. ஆனால், எனக்குத் தெரியாமலேயே பலரும் சிவப்பு நிற குடும்ப அட்டைகளை பெற்றுள்ளனா் என்றாா்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உறுப்பினா்கள் ஏன் காவல் நிலையம், அதிகாரிகளிடம் புகாா் அளிக்கவில்லை. என்னிடமாவது புகாா் கூறியிருக்கலாம் என்றாா்.

சுயேச்சை உறுப்பினா் அங்காளன் பேசுகையில், சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்க பணம் பெறப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு அமைச்சா் தயாரா? என்றாா்.

சிவப்பு நிற குடும்ப அட்டைகள் புகாா்கள் குறித்து முதல்வா் ஆராய்ந்து வருகிறாா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அவா் நடவடிக்கை எடுப்பாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்