சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மனு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மனு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 2023 செப்டம்பர் 16-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கடை வீதியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் தற்போதைய அரசின் தோல்விகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட பேச்சு தொடர்பாக ஏற்கெனவே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வர் மீதான எனது விமர்சனம் அவதூறு அல்ல. எனவே, இந்த வழக்கை ரத்து செய்வதுடன், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துஉள்ளார். இதையடுத்து, மனு மீது தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்