சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!

கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை, அமெரிக்க ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டதை கனடா நாட்டு மூத்த அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளதை தி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, இந்த செய்திகள் மூலமாக மேலும் பிளவை அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தொடர்பு பற்றி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் உறுதி செய்த தகவலை, தேசிய பாதுகாப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கனடா நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கூறியிருக்கிறார்.

அதாவது, "வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் என்னை அழைத்து அவர், அந்த நபர்தானா என்று கேட்டார். ஆமாம், அவர்தான் என்பதை நான் உறுதி செய்தேன்" என்று மொரிசன் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கூறினார்.

ஆனால், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடா நாட்டுக்கு எப்படி தெரிய வந்தது என்னபதை மோரிசன் கூறவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளம் கூறப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு முதலே கூறி வந்தார்.

ஆனால், கனடா அளித்த அதாரங்களில் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் பலமுறை குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டதுடன், கனடாவின் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்றும் கூறியிருந்தனர்.

அக். 14ஆம் தேதி, கனடாவில் உள்ள காலிஸ்தான் எனப்படும் சீக்கிய பிரிவினைவாதிகளை அமைதிப்படுத்தும் வகையில், கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் ஐந்து உயர் நிலை அதிகாரிகள் மீது, மிரட்டல் மற்றும் வன்முறை போன்ற பல வழக்குகளை பதிவு செய்து, நாட்டை விட்டு வெளியேற்றியது கனடா அரசு.

வெளிநாடுகளில், படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் மீது கனடா மட்டும் குற்றம்சாட்டவில்லை, நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கிலும் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை அண்மையில் குற்றச்சாட்டைப் பதிவு செய்திருந்தது.

அமெரிக்க நீதித்துறையால் பதிவுசெய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கில், நியூயார்க் நகரில் கொலைத் திட்டத்தை செயல்படுத்த கூலிப் படையை நியமித்ததாக இந்திய முன்னாள் உளவுத்துறை அதிகாரி விகாஷ் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாதலி ட்ரூயின், செவ்வாயன்று, ஆணையத்திடம் அளித்த தகவலில், கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்களின் தகவல்களை சில அமைப்புகள் மூலம் இந்திய அரசு சேகரித்ததற்கான ஆதாரங்கள் கனடாவிடம் உள்ளது என்று கூறினார்.

மேலும், இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ரவுடி கும்பலான லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புகொண்டிருப்பது குறித்தும் மத்திய அரசுக்குக் கூறியிருக்கிறது.

பிஷ்னோய் தற்போது இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஆனாலும், அவரது பரந்துவிரிந்த குற்றவியல் வலையமைப்பு மூலம், கனடாவில் கொலைகள், படுகொலை சதிகள், வற்புறுத்தல், இதர வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறுவதாக ட்ருயின் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன், சிங்கப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஒரு சந்திப்பு நடந்ததாகவும் ட்ரூயின் கூறியுள்ளார்.

முக்கிய ஆதாரங்களை அளித்தும், இந்திய அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்காது என்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்தே, பொது வெளியில் செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், கனடாவில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால்தான், இந்த வழக்கில், நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் குறித்து பகிரங்கமாக பேசும் அசாதாரண நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கனடா நாட்டின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள இந்திய அரசு, கனடாவின் நடவடிக்கைக்குப் பதிலாக, கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் ஆறு பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றியது.

கொலை செய்யப்பட்ட நிஜ்ஜார் (45), கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அமைந்துள்ள சீக்கிய கோயிலிலிருந்து வெளியே வந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவில் பிறந்த இந்திய குடிமகனான நிஜ்ஜார், சீக்கியர்களுக்கு என சுதந்திர நாடு உருவாக்க வேண்டும் என்ற இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

கனடாவில் வசிக்கும் நான்கு இந்தியர்கள் நிஜ்ஜார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.

– தி அசோசியேட் பிரஸ்

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!