சீதாராம் யெச்சூரி மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சீதாராம் யெச்சூரி மறைவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! – சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

எடப்பாடி பழனிசாமி

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர்.

இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான தோழர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் மக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவு இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகளுடன் மிகவும் நெருக்கமான- இணக்கமான தோழமையைப் போற்றியவர்.

எமது வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் பங்கேற்று எமக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

ராமதாஸ்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி (72 ) இன்று தில்லி – மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி பேரிடியாக வந்தது.

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையான சவால்களையும் எதிர் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும், முனைப்பான செயலாற்றலும் ஒருசேரப் பெற்றுள்ள தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மட்டும் அல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சுவரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

அன்புமணி ராமதாஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி ஆவார். தில்லியில் ஸ்டீபன் கல்லூரி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற யெச்சூரி, தமக்கு மூத்தவரான பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றியவர்.

கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டிருந்த யெச்சூரி, தேசிய அளவில் கூட்டணிகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். பெரியவர் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த யெச்சூரி, 1996 ஆம் ஆண்டில் தேவகவுடா தலைமையிலும், 2004 ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பெரும் பங்காற்றியவர்.

அரசியலில் மேலும் பல உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால் தோழர் யெச்சூரி காலமானதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி