சீனாவில் ஜப்பானிய சிறுவன் குத்திக்கொலை: முழு விசாரணை நடத்திட ஜப்பான் வலியுறுத்தல்

சீனாவில் பயின்று வந்த ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவன் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஷென்ஸென் ஜப்பானிய பள்ளி வாயில் அருகே கடந்த 18-ஆம் தேதி 10 வயது சிறுவன் ஒருவன் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

44 வயதான நபர் ஒருவர், அந்த சிறுவனை கத்தியால் குத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற அந்த நபரை காவல்துறையினர் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவன் கொலை விவகாரம் தொடர்பாக sஈன அரசு முழுமையான விசாரணை நடத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகோ காமிகாவா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று(செப்.23) நடைபெற்ற ஐ.நா. அவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றிருந்த சீன மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ-யிடம் இவ்விவகாரம் தொடர்பாக ஜப்பான் அழுத்தம் கொடுத்துள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் என்ன நடந்தது என்ற முழு விவரத்தை ஜப்பானிடம் விளக்கமளிக்கவும் அவர் சீனாவை கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற அசம்பவிதங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்திடவும் சீன அமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சீனாவில் வசித்துவரும் ஜப்பான் மக்களின் பாதுகாப்பை, அதிலும் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சீன அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் யோகோ காமிகாவா. மேலும், சமூக வலைதளங்களில் ஜப்பானியர்களுக்கு எதிரான பதிவுகள் பரப்பப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீனாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் ஜப்பானிய தொழில் முனைவோருடன் திங்கள்கிழமை (செப். 23) கலந்துரையாடிய ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் யோஷிஃபுமி ஸூஜ், அதன்பின் செய்தியாளர்களுடன் பேசுகையில், சீனாவில் ஜப்பானியர்களுக்காக இயங்கிவரும் ஜப்பான் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கூடங்களின் அருகாமையிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசு 3 லட்சம் டாலர் தொகையை உடனடியாக விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானிய மாணவர்கள் செல்லும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்புப் பணியில் காவலர்களை நியமிக்க கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஜப்பான் மக்களுக்கெதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. முன்னதாக, கடந்த ஜூன் மாதத்திலும் இதுபோன்றதொரு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவில் இயங்கிவரும் ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பை உறுதிசெய்வது அந்தந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்பு என சீனாவில் செயல்பட்டு வரும் ஜப்பானிய வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் டெட்ஸுரோ ஹான்மா தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஜப்பானை சேர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!