சுதந்திர தின விடுமுறைக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்
தென்காசி: சுதந்திர தின விழா விடுமுறைக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா வருகிற 15ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்து 4 நாட்கள் தங்கள் சொந்த ஊரில் விடுமுறையை கழிக்க சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
இந்த நிலையில், விருதுநகர் மேற்கு மாவட்ட பகுதி மக்கள், தென்காசி மாவட்ட மக்கள், திருநெல்வேலி மேற்கு மாவட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில், சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் ஆகிய ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு முடிவடைந்து மேலும் முன்பதிவு செய்ய முடியாத அளவு முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. தட்கல் முன்பதிவும் இன்று சில நிமிடங்களில் முடிந்து விட்டது.
சுதந்திர தின விடுமுறையை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் ரயில் பயணிகள் இருந்தனர். இந்நிலையில், இந்த வழியாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படாததால் சென்னையில் வசிக்கும் தென்காசி மற்றும் தென் மாவட்டங்களின் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சுதந்திர தின சிறப்பு பேருந்துகள் இயக்கக் கூடிய நிலையில் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சுரேஷ் கூறும்போது, "தமிழ் புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாததை போல தற்போது சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டும் தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாதது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எல்லா சிறப்பு ரயில்களும் திருநெல்வேலியில் இருந்து நேரடியாக சென்னைக்கு இயக்கப் படுகிறது.
தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கினால் பல்லாயிரக் கணக்கான பயணிகள் பயன்பெறுவர். எனவே தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்க தென்காசி தொகுதி எம்பி தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று சுரேஷ் கூறினார்.