சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலின்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஹோசியார் சிங் (தேஹ்ரா), ஆஷிஷ் சர்மா (ஹமிர்பூர்), கே.எல்.தாக்கூர் (நாலாகர்) ஆகியோர், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர். அதன்பின்னர் மூன்று பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த மார்ச் 22-ம் தேதி சட்டசபை செயலாளரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, 23-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தனர்.
ஆனால், அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார். அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை, கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தனர் என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தரப்பில் தெரிவித்ததாக சபாநாயகர் கூறியிருந்தார்.
ராஜினாமாவை ஏற்கக்கோரி 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா இன்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இதேபோல் மாநிலங்களவை தேர்தலின்போது கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் தொகுதிகளில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலின்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வில் இணைந்த 6 பேரையும் அவர்களின் தொகுதிகளிலேயே பா.ஜ.க. நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.