சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 13.10.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை மாதிரிகளின் (forecast models) அடிப்படையில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது. 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது.

இதையும் படிக்க: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

இந்த கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் முதலமைச்சர், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அறிவுரைகளை வழங்கினார்.

பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம் எனவும், முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது