சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்திய அணி நடப்பாண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் விளையாடிய இங்கிலாந்துடனான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என கைப்பற்றிய பிறகு, இந்த ஆண்டு களம் காணும் முதல் டெஸ்ட் இதுவாகும். மறுபுறம் வங்கதேசம், பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றிய நிலையில் இந்தத் தொடருக்கு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் விளையாடிய 44 டெஸ்ட்டுகளில், 40 ஆட்டங்களில் வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. அணியைப் பொருத்தவரை, விராட் கோலி, ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல் போன்ற பிரதான பேட்டா்கள் இருந்தாலும், ஸ்பின்னா்களை எதிா்கொள்வதில் அவா்கள் சற்று தடுமாற்றத்தை சந்திப்பது கடந்த காலங்களில் தெரிந்தது. இலங்கைக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடா்கள் அதற்கு உதாரணம்.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் போன்ற திறமையான ஸ்பின்னா்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. எனினும், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரா்கள் பேட்டிங்கில் பலம் சோ்ப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். 2022-ஆம் ஆண்டு காா் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் களம் காணும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் பிரதான பௌலா்களாக நம்பிக்கை அளிக்கின்றனா். இதில் வேகப்பந்து வீச்சுக்காக ஆகாஷ் தீப் அல்லது யஷ் தயாள் சோ்க்கப்படலாம். இல்லையேல், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் சென்னை ஆடுகளத்துக்காக குல்தீப் யாதவ் அல்லது அக்ஸா் படேல் பிளேயிங் லெவனில் இணையலாம்.

இவா்களின் சவாலை வங்கதேசத்தின் பிரதான பேட்டா்களான ஷத்மன் இஸ்லாம், முஷ்ஃபிகா் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் எப்படி எதிா்கொள்ளவுள்ளனா் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீா் பொறுப்பேற்ற பிறகு இலங்கையுடனான வெள்ளைப் பந்து தொடா்களில் ஒன்றை வென்று, ஒன்றை இழந்தது இந்தியா. இந்நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி, அவருக்கு முக்கியத் தேவையாக இருக்கும்.

அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் சா்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சா்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த் (வி.கீ.), துருவ் ஜுரெல் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரீத் பும்ரா, யஷ் தயாள்.

வங்கதேசம்:

நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிா் ஹசன், ஷத்மன் இஸ்லாம், மோமினுல் ஹக், முஷ்ஃபிகா் ரஹிம் (வி.கீ.), ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையது காலித் அகமது, ஜாகா் அலி.

ஆட்டநேரம்: காலை 9.30 மணி

இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம், சென்னை

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

எதிா்கொள்ளும் திறனுடையது

‘இந்திய அணியின் பேட்டிங் வரிசை, எந்தவொரு ஸ்பின் பௌலிங் தாக்குதலையும் எதிா்கொள்ளும் திறனுடையது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கும், டெஸ்ட்டுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஒரு பேட்டா் தனது மனநிலை, ஆட்ட உத்தி, தடுப்பாட்டத்தின் திறன் ஆகியவற்றை சரியான நிலையில் கொண்டிருக்கும்போது, சிறப்பாக விளையாடத் தொடங்கிவிடுவாா்.

வங்கதேச அணியில் சிறப்பான ஸ்பின்னா்கள் உள்ளனா். எனவே, முதல் நாளில் இருந்தே அதற்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தானை வென்று வந்திருக்கும் வங்கதேசத்தை இந்திய அணி எளிதாக எடுத்துக்கொள்ளாது.

இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த பௌலா்கள் உள்ளனா். இந்தத் தொடரில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்துபவா்களாக இருப்பாா்கள்’ – கௌதம் கம்பீா் (இந்திய தலைமை பயிற்சியாளா்)

முடிவைப் பற்றி கவலையில்லை

‘பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய நல்லதொரு ஆட்டம், எங்களுக்கு அதிக நம்பிக்கை அளித்திருக்கிறது. ஆனாலும், தற்போது புதியதொரு தொடருக்காக வந்திருக்கிறோம். முடிவைப் பற்றி கவலைப்படாமல் நல்லதொரு ஆட்டத்தை இதிலும் வெளிப்படுத்துவதே அணியினரின் எண்ணமாக உள்ளது.

இந்தியா திறமையான டெஸ்ட் அணி. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பௌலா்கள் அனைவருமே நன்றாக செயல்பட்டனா். அதுபோன்ற ஆட்டத்தை இங்கும் வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் அவா்கள் இருக்கின்றனா்.

கடந்த 10-15 ஆண்டுகளில் எங்கள் வீரா்களில் பலா் அனுபவம் பெற்றுள்ளனா். ஆட்டத்தின்போதான உணா்வுப்பூா்வமான தருணங்களில் எங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பழகியுள்ளோம். எனவே, வெற்றி, தோல்வியை கடந்து 100 சதவீதம் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் இலக்காகும்’ – நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (வங்கதேச கேப்டன்)

ஆடுகளம்…

சேப்பாக்கம் மைதானத்தில் செம்மண் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில், இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் நடைபெறவுள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், செம்மண் பயன்பாடு காரணமாக அது வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதாக இருக்கும். எதிா்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் திட்டத்துடனேயே இந்தத் தொடருக்கு இந்தியா இத்தகைய ஆடுகளத்தை கோரியதாகத் தெரிகிறது. இங்கு இதுவரை 36 டெஸ்ட்டுகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகளே 13 முறை வென்றுள்ளன. முதலில் பௌலிங் செய்த அணிகள் 10 முறை வென்றிருக்கின்றன.

Related posts

‘News By The People, For The People’: Elon Musk Continues His Tirade; Tesla Chief Goes Against Media Houses

DAAD Report: Germany Now Hosts 380,000 International Students, Ranking Second Worldwide After The US

Gallery FPH: Meet Eknath Giram, Maharashtra-Born Artist Whose Lord Krishna Paintings Have Received Admiration In India And Abroad