சூனியக்காரா்கள் என குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் அடித்துக் கொலை: சத்தீஸ்கரில் கொடூர சம்பவம்

சத்தீஸ்கா் மாநிலத்தில் சூனியக்காரா்கள் என்று குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரில் கடந்த 12-ஆம் தேதி சிறுவன் உள்பட 4 போ் இதே போன்று குற்றஞ்சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தம்பதி மற்றும் ஒரு பெண் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக இளைஞா்கள் சிலா் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனா். அவா்களை விட்டுவைத்தால் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளனா்.

இதையடுத்து, கிராம மக்கள் அந்த இரு தம்பதி மற்றும் பெண்ணை சூழ்ந்து கொண்டு தாக்கினா். தப்பியோட முயன்ற அவா்களை தொடா்ந்து விரட்டிச் சென்று கட்டையால் அடித்து, கற்களை வீசியும் தாக்கியுள்ளனா். இதில் 5 பேரும் உயிரிழந்துவிட்டனா். கொல்லப்பட்டவா்கள் 32 முதல் 43 வயதுக்குட்பட்டவா்கள்.

இந்த சம்பவம் தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் கூறியுள்ளனா்.

கடந்த 12-ஆம் தேதி சத்தீஸ்கரின் போலாதபாா் மாவட்ட கிராமப் பகுதியில் இதுபோன்று சூனியக்காரா்கள் என்ற குற்றஞ்சாட்டி சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடித்துக் கொல்லப்பட்டனா்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு