சூர்யகுமார் யாதவ் விரைவில் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் – ரவி சாஸ்திரி அட்வைஸ்

டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படும் சூர்யகுமார் கேப்டனாக தகுதியானவர் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இந்த பயணம் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து ஆரம்பமானது.

முன்னதாக டி20 உலகக்கோப்பை உட்பட சமீப காலங்களில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதனால் ரோகித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் அவர் பிட்டாக இல்லையென்று சொல்லி சூர்யகுமாரை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறமையை கொண்டுள்ள சூர்யகுமார் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். எனவே அவரை கேப்டனாக்க கவுதம் கம்பீர் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படும் சூர்யகுமார் கேப்டனாக தகுதியானவர் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அதே போல பவுலர்களின் பலம் பலவீனங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பீல்டிங்கை செட்டிங் செய்யும் யுக்தியை சூர்யகுமார் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தன்னுடைய அணியில் உள்ள பவுலர்களின் பலம், வரம்பு என்ன என்பதை சூர்யகுமார் கற்றுக்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும். பவுலர்களுக்கு பலவீனம் இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களிடம் உச்சகட்ட வரம்பு மற்றும் பலம் இருக்கும். எனவே சூர்யகுமார் அதில் கவனம் செலுத்தி அதற்கு தகுந்தாற்போல் பீல்டிங்கை செட்டிங் செய்ய வேண்டும். அதைத்தான் அவர் கேப்டனாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மிகவும் புத்திசாலித்தனமான சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக திகழ்வதை நாம் அறிவோம். இந்த பார்மெட்டில் அவர் தனது சொந்த வழியைப் பின்பற்றினாலும் அது மோசமான ஐடியாவாக இருக்காது. பேட்டிங்கில் விளையாடுவதைப் போலவே அவருடைய கேப்டன்ஷிப் இருக்கும் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் தற்போதுள்ள அணியில் இருக்கும் அனைத்து வீரர்களை பற்றியும் அவர் நன்றாக அறிவார். எனவே அதற்கு தகுந்தாற்போல் வேகமாக சிந்தித்து அவரால் செயல்பட முடியும்" என்று கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி