செங்கல்பட்டில் தசரா விழா இன்று தொடக்கம்: பாதுகாப்பு கேள்விக்குறி? 

செங்கல்பட்டில் தசரா விழா இன்று தொடக்கம்: பாதுகாப்பு கேள்விக்குறி?

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஆண்டுதோறும், நவராத்திரியை ஒட்டி, 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இன்று (அக்.3) தொடங்கும் தசரா விழாவில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சார் ஆட்சியர் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டும் அதிகாரிகள், விழா குழுவினர் அதைப் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல்பட்டில் நடைபெற்று வரும் பிரசித்திபெற்ற தசரா விழா இன்று (அக்.3) இரவு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன் கோயில், சின்னநத்தம், ஓசூரம்மன் கோயில், முத்துமாரியம்ன் கோயில், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அம்மன் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும்.

இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி, அனுமந்தபுத்தேரி பகுதியில், சிறிய, பெரிய ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடைகள், உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தசரா கொண்டாட்டம் நடைபெற உள்ள இடங்களில் சாா் ஆட்சியா் நாராயண சா்மா கடந்த 1-ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை அறிந்து அவர் அதிா்ச்சி அடைந்தாா். அவற்றை சரி செய்ய அதிகாரிகளுக்கும் விழா குழுவினருக்கும் உத்தரவிட்டார்.ஆனால், இந்த நிமிடம் வரை சார் ஆட்சியர் கூறிய எந்த குறைபாடுகளையும் சரிசெய்யவில்லை. ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ராட்டினங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டும் இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர்.

தசரா விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்கள் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு வருவாய் துறை, தீயணைப்பு துறை, மின்துறை மற்றும் பொதுப்பணித் துறையால் வழங்கப்படும் அனுமதிச் சான்றிதழ்கள் இன்னும் பெறப்படவில்லை எனத் தெரிகிறது.இதனிடையே தசரா திருவிழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என பாஜக தரப்பில் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சார் ஆட்சியர் நாராயண சர்மா தனது ஆய்வின் போது பாதுகாப்பு குறைபாடு உள்ள மூன்று ராட்சத ராட்டினங்களை அகற்றவும், கழிப்பறைகள் அமைக்கவும் குடி தண்ணீர் டேங்குகள் மற்றும் ஒவ்வொரு கடைக்கும் இரண்டு தீயணைப்பான்கள் வைக்கவும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவை எதையுமே செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.

இங்குள்ள கடைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு பதிலாக நேரடியாக கொக்கி போட்டு மின்சாரத்தை முறைகேடாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள் அத்துடன், ராட்டினங்கள் அனைத்தும் உயரழுத்த மின் கம்பிகளுக்கு மிக அருகில் உள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை – பிரதமர் மோடி கடும் தாக்கு

அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் – உமர் அப்துல்லா

புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்