செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

செஞ்சிக் கோட்டை என்றவுடன் அனைவரின் நினைவிற்கும் வருவது மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்கள். "தெருக்கூத்து" அல்லது "பொய்க்கால் குதிரை" கலைகள் மூலம் மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களின் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு எடுத்துக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு “தேசிங்கு என்ற பெயர் இன்றளவிலும் வைக்கப்படுகிறது.

மறைந்த செஞ்சி மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்கள், விடுதலை உணர்வை ஊட்டும் வகையில், "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்பதற்கேற்ப, "அந்நியர்களுக்கு கப்பம் கட்டமாட்டேன்" எனக்கூறி உள்ளூர் இளவரசரை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தார். சுயமரியாதையின் மறுவுருவமாக விளங்கியவர் மாமன்னர் ராஜா தேசிங்கு. மாமன்னர் ராஜா தேசிங்கு இறந்த அன்றே அவருடைய மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிர் நீத்ததாகவும், இதன் காரணமாக ராணிப்பேட்டை நகரம் உருவாகியதாகவும் வாவாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ராஜா தேசிங்கு" என்ற திரைப்படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்ததை இந்தத் தருணத்தில் நினைவுகூர விருப்புகிறேன். 03-10-2024 அன்று மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களின் 310-வது நினைவு நாள் வருவதையொட்டி அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று நாயகள், செஞ்சி மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களின் 310-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு செஞ்சியில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஜாதேசிங் ராஜ்புக் பொந்தில் சேனா அமைப்பினர் வைத்துள்ளனர்.

வீரதீரச் செயல் புரிந்தவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்கள் போன்றவர்களின் பெருமைகளை எதிர்காலச் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியது ஒரு நல்லரசின் கடமையாகும்.

அந்த வகையில், அடக்குமுறையை எதிர்த்து போராடி தன்னுயிரைத் தியாகம் செய்த மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களுக்கு செஞ்சியில் ஒரு மணிமண்டபத்தை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/0t8VegCfnU

— O Panneerselvam (@OfficeOfOPS) October 2, 2024

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்